தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் இயங்கி வருகின்றன. இந்த அலகுகள் மூலம் நாள்தோறும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் பராமரிப்பு ரீதியாக அவ்வப்போது ஏற்படும் சிறு, சிறு பழுதுகளுக்காக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் முழு மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படுவது வழக்கம்.
தற்போது, தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 1, 3, 4, 5 அலகுகளில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதாகியுள்ளதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பழுதாகிய யூனிட்களை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காற்றாலை, நீர் ஆகியவற்றின் மூலமாக உற்பத்தியாகும் மின் ஆற்றல் தொகுப்பு அதிகரித்ததன் காரணமாக தமிழ்நாட்டில் மின் வெட்டு ஏற்படும் நிலை இல்லை என தூத்துக்குடி அனல்மின் நிலைய தலைமை பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் மின் உற்பத்தி தேவைக்காக அணுமின் நிலையங்கள், அனல்மின் நிலையங்கள், நீர்மின் உற்பத்தி நிலையங்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர இயற்கை மலைப்பாங்கான இடங்களிலும், காற்றின் திசைவேகம் அதிகம் உள்ள இடங்களிலும் காற்றுச் சுழலி மூலமும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அணுமின், அனல்மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமானது தமிழகத்தின் தேவைக்கு போக மீதி அண்டை மாநிலமான கேரளவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டின் தூத்துக்குடி, சென்னை, கல்பாக்கம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் அனல்மின் நிலையங்கள் இயங்கி வருவது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : ஊரடங்கு உத்தரவில் ஊருக்குள் உலாவிய புள்ளிமான் - சுற்றி வளைத்த தீயணைப்புத் துறை!