தூத்துக்குடி: தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் முழு ஊரடங்கால் வேலையின்றி பாதிக்கப்பட்ட சுனாமி காலனி, தாளமுத்துநகர் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் 120 பேருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் துறையின் சார்பில் அரிசி பை, மளிகை பொருள்கள், காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுபடுத்த அரசு அறிவித்த ஊரடங்கு வரும் மே 7ஆம் தேதிவரை அமலில் இருக்கும். அதை நடைமுறைப் படுத்தும் வகையில் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கபட்டு தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு விதிகளை மீறியதாக 4ஆயிரத்து 20 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
மேலும், "மாவட்ட காவல் துறை அலுவலகத்திலுள்ள காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் கரோனா கால சிறப்பு சேவை மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு உதவிகள் தேவைப்பட்டால் 95141 44100 என்ற எண்ணை அழைத்துக் கூறினால் தேவைப்பட்ட உதவிகள் செய்யப்படும். இதன் மூலம் இதுவரை உதவி கேட்டு 160 அழைப்புகள் வந்துள்ளன. உதவிகள் கேட்ட அனைவருக்கும், அவர்களுக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய நிவாரண உதவிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும், முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும், அடிக்கடி கைகளை கிருமி நாசினி, சோப்பு போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும், தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: எதிரெதிர் துருவங்களான திமுகவினரும் அதிமுகவினரும் இணைந்து மக்களுக்கு உதவி!