தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்தவர், முருகன். இவர், சிதம்பரநகர் பிரதான சாலையில் நகைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல வியாபாரம் முடிந்ததும், ஞாயிற்றுக்கிழமை இரவுக் கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்ற முருகன் திங்கள்கிழமை காலை கடையைத்திறந்தபோது, கடையிலிருந்த பொருள்கள் சிதறிக்கிடந்தன. கடையின் உள்ளே அவர் சென்றுபார்த்தபோது பின்பக்க சுவரில் துளையிட்டு கடையிலிருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்துக்கு முருகன் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது கடையின் பின் பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோயில் உள்ள சூலாயுதத்தை எடுத்து, கடை சுவரில் துளையிட்டு கடைக்குள் சென்று நகைகளை கொள்ளையடித்து தெரியவந்தது. மேலும் சம்பவ இடத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணன் தலைமையிலான காவலர்கள் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், திருட்டு நிகழ்ந்த இடத்தில் தடயவியல் நிபுணர்களும் சோதனை மேற்கொண்டனர். இந்த திருட்டுச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தென்பாகம் காவல்துறையினர் கடை மற்றும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் திருடர்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கடையிலிருந்த 3 கிலோ வெள்ளி மற்றும் இரண்டு சவரன் தங்க நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், நகை திருட்டு தொடர்பாக தூத்துக்குடி லோகியாநகரை சேர்ந்த முனியசாமி (24), பிரையன்ட்நகர் 4ஆவது தெருவைச் சேர்ந்த சதீஷ் (20), லெவிஞ்சிபுரம் 2ஆவது தெருவைச் சேர்ந்த சுடலையாண்டி (29) மற்றும் 17 வயது இளம் சிறுவன் ஆகிய 4 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். திருட்டுச்சம்பவம் நிகழ்ந்த 4 மணி நேரத்திலேயே குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை தனி செயலி மூலம் ஒளிபரப்பியதாக இளைஞர் கைது