தூத்துக்குடி: சென்னை மணலியில் உள்ள பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் தூத்துக்குடி- ராமநாதபுரம் இடையே 143 கி. மீ தூரத்துக்கு இயற்கை எரிவாயு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. மேலும், மணலியில் உள்ள நிறுவனத்தில் கந்தகம் அகற்றும் யூனிட் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. நிறைவடைந்த இந்த இரண்டு திட்டங்களையும் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக இன்று மாலை அர்ப்பணித்து வைத்தார்.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனமும், இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து நாகப்பட்டினத்தில் காவிரி படுகையில் ரூ. 31 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படவுள்ளது. இதற்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மாற்று எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க சூரிய மின் உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கப்படுவதாகவும், இந்தியாவின் எரிசக்தி தேவைக்கு மாற்று எரிசக்தி வழிகள் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
கடந்த ஆறு ஆண்டுகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் ரூ. 50 ஆயிரம் கோடி அளவிற்கான திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், மேலும், ரூ. 4,300 கோடி அளவிலான திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரதமரின் பரிசா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு?