தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.உ.சி. நகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பத்மசங்கர். இவருக்குத் திருமணமாகி முத்துலெட்சுமி என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். பத்மசங்கர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு மூன்று சக்கர மோட்டார் சைக்கிளுக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
ஆனால் இதுவரை அவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கப்படவில்லை. பத்மசங்கருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக இரு கால்களும் செயலிழந்துவிட்டன. இதனால் அன்றாடப் பணிகளை மற்றவர்களின் துணையில்லாமல் செய்ய முடியாமல் தவித்துவருகிறார். இந்த நிலையில் இவர் கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனை அப்பகுதியில் நின்றிருந்த காவலர்கள் கவனித்து, பத்மசங்கரை மீட்டனர். சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் வட்டாட்சியர் சம்பவ பகுதிக்கு விரைந்துவந்தார். பத்மசங்கருக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் மட்டுமின்றி, அவருக்கு இலவச வீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். பின்னர் பத்மசங்கரை ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.
இதையும் படிங்க: குடும்பத் தகராறில் பெண் தீக்குளிப்பு - கணவர் கைது!