தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பா. இவர் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் தொகுதி செயலாளர் ஆவார்.
இவர் முகநூலில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து குளத்தூர் காவல்நிலையத்தில் பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் செல்லப்பா நேற்று (ஆகஸ்ட் 2) தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தந்ததை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அந்த வீட்டை முற்றுகையிட்டு அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென் பாகம் காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணகுமார் செல்லப்பாவை பாதுகாப்பாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
இதையும் படிங்க... வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் மதுரைக்கும் உள்ள தொடர்பு இதுதானா!