தூத்துக்குடி: திருச்செந்தூர்- சென்னை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியுள்ளது. இதில் பயணித்த 800 பயணிகளில் சுமார் 300 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளின்றி 3 வது நாளாக தவிக்கும் 500 பயணிகளின் நிலை கவலைக்குரியதாக மாறியுள்ளது.
3 நாட்களாக ரயிலில் சிக்கிக் கொண்டு இருப்பதால் உணவு மட்டுமல்லாமல் கழிவறை, குடிநீர் போன்ற வசதியும் கிடைக்காமல் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக ஒரே கழிவறையை பலர் தொடர்ந்து பயன்படுத்துவதால் அவர்களுக்கு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் ரயிலில் உள்ள குழந்தைகள் பசி பட்டினியால் வாடி வருகின்றனர்.
ரயிலில் சிக்கியுள்ள பயணிகள், "தங்களுக்கு உணவில்லை என்றாலும் பரவாயில்லை தங்கள் குழந்தைகளுக்கு உடனடியாக உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என கூறியுள்ளனர். அது மட்டுமல்லாமல் துரிதமாக தங்களை எங்கிருந்து மீட்டு பத்திரமான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ரயில் நிலையத்தை சுற்றிலும் மழை வெள்ளம் சூழ்ந்து சுமார் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் ரயில் பயணிகள் யாரும் அங்கிருந்து வெளியேற முடியாமலும் வெளியே இருந்து யாரும் ரயில் நிலையத்திற்குள் செல்ல முடியாத நிலையும் நீடித்து வருகிறது. மேலும் தற்போது சென்னை மதுரை போன்ற நகரங்களில் இருந்து ஆர்பிஎப் வீரர்கள் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திற்கு விரைந்துள்ளனர். தொடர்ந்து ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து ரயில் பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தொடர்ந்து இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் முதற்கட்டமாக மருத்துவ உதவி தேவைப்படும் நபர்கள் மட்டும் மீட்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கர்ப்பிணி பெண் ஒருவர் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிக் கொண்டதாக வெளியான தகவலை அடுத்து ஹெலிகாப்டர் மூலம் அந்த கர்ப்பிணி பத்திரமாக மீட்கப்பட்டு, முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதே போன்று குழந்தை உட்பட மூவர் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நெல்லையில் வடியத் தொடங்கிய மழை வெள்ளம்.. மீட்புப் பணிகள் தீவிரம்!
முன்னதாக ரயிலில் உள்ள பயணிகளுக்கு நேற்று ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்படும் என்று தென்னக ரயில்வே கூறியிருந்தது. அதன்படி உணவு வழங்குவதற்காக வந்த ஹெலிகாப்டர் நேற்று நிலவிய மோசமான வானிலை மாற்றம் காரணமாக ரயில் பயணிகளுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு திருப்பிச் சென்றது. மீண்டும் இன்று அவர்களுக்கு தேவையான உணவுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டு போக்குவரத்து சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 17ஆம் தேதி இரவு திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலானது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
கனமழை காரணமக ஏற்பட்ட வெள்ளத்தால் அந்த ரயில் பயணிகளுடன் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் தொடர் மழையால் தண்டவாளங்கள் சேதம் அடைந்ததை அடுத்து ரயிலை மேற்கொண்டு இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக ரயில் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் மொத்தம் 22 பெட்டிகளில் சுமார் 800 பயணிகள் வரை சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அதி கனமழை எதிரொலி: தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல்வேறு ரயில்கள் ரத்து!