தூத்துக்குடி : ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த டேனியல் துரைப்பாண்டி சுந்தரி தம்பதியின் மகன் இயேசு ராஜா. இவர், ஸ்ரீவைகுண்டம் கேஜி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வரும் விவேக் சில தினங்களுக்கு முன் ஒரே நேரத்தில் இரு கைகளால் இயேசு ராஜாவின் இரு காதுகளிலும் ஓங்கி அறைந்ததாக கூறப்படுகிறது இதில் இயேசு ராஜாவின் காதில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது.
வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டிய ஆசிரியர்: பின்னர் மாணவனின் வீட்டுக்குத் தகவல் கூறாமல் ஆசிரியர் விவேக் ரகசியமாக மாணவனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
மேலும், இந்த விஷயத்தை வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது என்று ஆசிரியர் விவேக் மிரட்டியதாகத் தெரிகிறது. இதனால், மாணவன் இயேசு ராஜாவும் ஆசிரியர் அடித்த விவகாரத்தை வீட்டிற்கு சொல்லாமல் சுயமாக காதில் மருந்து போட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், சில தினங்களாக மாணவனின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படவே அவனை விசாரித்தபோது தனக்கு நேர்ந்த துயரம் குறித்து பெற்றோரிடம் இயேசு ராஜா தெரிவித்துள்ளார்.
காவல்துறையிடம் புகார்: இதையடுத்து, ஆசிரியர் விவேக் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவனின் பெற்றோர் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும், ஆசிரியர் அடித்ததில் மாணவனுக்கு ஒரு காது கேட்கவில்லை என கூறப்படுகிறது. எனவே மேல்சிகிச்சைக்காக மாணவனை அவரது பெற்றோர்கள் இன்று (மார்ச் 27) நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து மாணவனின் உறவினர்கள் கூறுகையில், ”எங்கள் பிள்ளையின் நிலைமை வேறு எந்த மாணவனுக்கும் ஏற்பட கூடாது எனவே நீதி கேட்டு ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.மாணவர்களை கண்டிப்பது ஆசிரியர்களின் கடமை என்றாலும் கூட அவர்களின் எதிர்காலம் பாதிக்கும் வகையில் இதுபோன்று கொடூரமாக அடிப்பது ஏற்க முடியாத செயல் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இதையும் படிங்க:புதுச்சேரி-ஹைதராபாத் விமான சேவை மீண்டும் தொடக்கம்!