தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே உள்ள கீழ வல்லநாடு, கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சின்னதுரை (45) - சங்கரம்மாள் (40) தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். பி.காம் பட்டதாரியான இவர்களது மகள், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், சின்னதுரையின் மகள் நேற்று(ஜன.23) பெற்றோர்களின் விருப்பத்தை மீறி தனது காதலனுடன் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. இதனால் மனவேதனையடைந்த சங்கரம்மாள் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று அதிகாலையில் மனைவி இறந்து கிடந்ததைப் பார்த்த சின்னதுரையும் தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன், ரூரல் டிஎஸ்பி சத்யராஜ் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் பெண் தற்கொலை