தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் அருகேயுள்ள குமாரகிரி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் சாலை பணிகள், வாழை தோட்டங்களுக்கு வாய்க்கால் வரப்பு அமைக்கும் பணிகள் ஆகியவற்றிற்கு டெண்டர் எடுத்ததில் முறைகேடு நடந்துள்ளது. இதனால் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் அதன் ஒப்பந்ததாரர்களை முற்றுகையிட்டனர்.
பின்னர், டெண்டர் முறைகேடு குறித்து குமாரகிரி 12ஆவது வார்டு கவுன்சிலர் நர்மதா, 13ஆவது வார்டு கவுன்சிலர் ஆஸ்கார் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "2019ஆம் ஆண்டு ஊராட்சி பணிகளை மேற்கொள்வதற்காக டெண்டர் அடிப்படையில் பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதற்கு கவுன்சிலர்கள் அனைவரும் ஒருமனதாக ஒப்புதல் வழங்கினர்.
வாழை தோட்டங்களுக்கு வாய்க்கால் வரப்பு அமைக்கும் பணிகளில் முறைகேடு நடந்துள்ளது. தற்பொழுது வரை பணிகள் முடிக்கப்படாமல் தரம் குறைந்த கம்பி, கட்டுமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் விளக்கம் கேட்கையில், அவர்கள் உரிய பதில் அளிக்க மறுத்துவிட்டனர். டெண்டர் குறித்த விவரம் அடங்கிய பணி ஒதுக்கீடு ஆணை நகலை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தர மறுத்துவிட்டார்.
இதில் ஊழல் நடந்திருப்பது தெளிவாகிறது. ஊராட்சி பணி டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும்" என்றனர்.