தூத்துக்குடி: கன்னியாகுமரி மாவட்டம் மணவாளபுரத்தைச் சேர்ந்தவர்கள் முத்துராஜ் - ரதி தம்பதி. முத்துராஜ் கட்டிட வேலை செய்து வருகிறார். இருவருக்கும் திருமணமாகி ராஜேஸ்வரி, ராஜசேகர், ஸ்ரீ ஹரிஷ் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளது. முத்துராஜ், ரதியும் அவர்களுடைய கடைசி மகன் ஸ்ரீஹரிஷ் உடன் கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு மாலை அணிவித்து விரதம் இருப்பதற்காக வந்துள்ளனர்.
இந்நிலையில், கோயில் வளாகத்தில் தங்கி இருந்தபோது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண், இருவரிடமும் நன்றாக பேசி பழகி அவர்களுடன் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில், அந்தப் பெண் துணிகளை துவைப்பதற்காக நேற்று (அக் 5) காலை 6 மணியளவில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு இருவரையும் அழைத்து வந்துள்ளார்.
இதனையடுத்து, நண்பகல் 12 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி கோயில் கலையரங்கம் அருகே உள்ள சுகாதார வளாகத்தில் ரதி துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, சோப்பு வாங்குவதற்காக முத்துராஜ் கடைக்குச் சென்று உள்ளார். அப்போது குழந்தைக்கு அப்பெண் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்துவிட்டு வருவதாகக் கூறி குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 4 காவல் துறையினர் கைது!
நீண்ட நேரம் ஆகியும் குழந்தையை எடுத்துச் சென்ற அந்தப் பெண் வராததால், கோயில் வளாகத்தில் முத்துராஜ் - ரதி தம்பதி அந்தப் பெண்ணை தேடி வந்துள்ளனர். பின்னர், குழந்தையைக் காணவில்லை எனத் தெரிந்த தம்பதியினர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் கோயில் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பின்னர், சிசிடிவிகளை ஆய்வு செய்ததில், அந்தப் பெண் குழந்தையை தூக்கிச் செல்வது தெரிய வந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிசிடிவி காட்சிகளில் குழந்தையை தூக்கிச் செல்லும் அப்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் திருச்செந்தூரில் குழந்தையை கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக சென்னையைச் சேர்ந்த தம்பதியினரின் இரண்டரை வயது குழந்தை பட்டப்பகலில் திருப்பதியில் கடத்தப்பட்டது. சிசிடிவி காட்சிகளை வைத்து குழந்தையை கடத்திச் சென்ற நபரை கண்டுபிடித்து 12 மணி நேரத்தில் குழந்தையை போலீசார் மீட்டனர்.
இதையும் படிங்க: நெல்லை இளம்பெண் கொலை விவகாரம்; முதற்கட்டமாக 6 லட்சம் நிவாரண நிதி அளிப்பு!