தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் இருந்து படுக்கை வசதிகளுடன் கூடிய தனியார் ஆம்னி பேருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது, அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி புறவழிச்சாலையில் ஆம்னி பேருந்து திடிரென எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி மதுரை - தூத்துக்குடி பிரதான சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் பேருந்தின் அடியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணம் செய்த 3 குழந்தைகள் உள்பட 16 பேர் படுகாயமடைந்தனர். நள்ளிரவு நேரத்தில் பயணிகள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட விபத்தினால் இடிபாடுகளில் சிக்கி வெளியே செல்ல வழியின்றி பயணிகள் பேருந்தின் உள்ளே அலறி துடித்தனர்.
பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல், தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் உயிரிழந்த பெண் பயணியின் உடலையும் மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் மதுரை தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, கிரேன் மூலம் விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்தை அப்புறப்படுத்தி காவல் துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆம்னி பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தம்பி மனைவி மீது சுடுதண்ணீரை ஊற்றிய அண்ணன் - சிசிடிவி வைரல்!