தூத்துக்குடி: கோரம்பள்ளம், வீரபாண்டியப்பட்டினத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா ஆகியோர் நேற்று (அக். 27) ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது, தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, தொழில் பயிற்சி நிலையத்தில் உள்ள பயிற்சி இயந்திரங்கள் செயல்பாடு, விரிவுப்படுத்த வேண்டிய பாடப்பிரிவுகள் குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் சி.வி.கணேசன், அவர்களின் தேவைகள் மற்றும் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், “தமிழ்நாட்டில் உள்ள 90 தொழிற்பயிற்சி நிலையங்களையும் ஆய்வு செய்து, தற்கால சூழ்நிலைக்கு ஏற்ப புதியபாடப் பிரிவுகளை கொண்டு வந்து,மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான் அரசின் நோக்கம்.
கடந்த10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் 40 ஆயிரம் மாணவர்கள் படித்த தொழிற்பயிற்சி நிலையங்களில், தற்போது 25 ஆயிரம் பேர்தான் படிக்கின்றனர். வரும் கல்வி ஆண்டில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய அளவில் இவற்றின் தரம் உயர்த்தப்படும்.
தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டியுள்ளது. அந்தப் பணிகளுக்கு ஆயிரக்கணக்கான பிளம்பர்கள் தேவை. அதேபோல், எலக்ட்ரீசியன், வயர்மேன், ஏசி மெக்கானிக், கணினி ஆபரேட்டர் என இளைஞர்களுக்கு எந்தெந்த பிரிவுகளில் வேலை கிடைக்குமோ அந்த பாடப் பிரிவுகளைக் கொண்டு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்” எனக் கூறினார்.
இதையடுத்து, மத்திய தொகுப்பு சட்டத்தின் கீழ் தொழிலாளர் வாரியம் மற்றும் அமைப்பு சாரா வாரிய உறுப்பினர் பதிவு மேற்கொள்ளப்படுவதால் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தொழிலாளர் நல வாரியங்கள் கலைக்கப்படுமா, எனக் கேள்வி எழுப்பியதற்கு, “தமிழ்நாட்டில் மட்டும் 17 தொழிலாளர் நலவாரியம் மற்றும் ஒரு கட்டுமான தொழிலாளர் நலவாரியம் உள்ளது. இது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்டு சுமார் 30 லட்சம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
தற்போது, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்பேரில் மத்திய அரசாங்கம் ஆன்லைன் மூலமாக வாரிய பதிவினை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து, தமிழ்நாடு தொழிலாளர் நலவாரிய பிரதிநிதிகள் மத்திய அரசுடன் பேசி வருகின்றனர். விரைவில் தமிழ்நாடு முதலமைச்சருடன் ஆலோசித்து இதற்கு நல்ல தீர்வு எட்டப்படும்” எனப் பதிலளித்தார்.
இந்த ஆய்வின் போது ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு துறை இயக்குனர் வீரராகவராவ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: போக்குவரத்து துறையில் 6 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன - ராஜகண்ணப்பன்