தூத்துக்குடி: எட்டயபுரம் அருகே உள்ள உசிலம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் 11 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் சமையலராக உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பணியமர்த்தப்பட்டார். இவர் இப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கும், நாவழக்கம்பட்டி பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கும் சமையலராக உணவு தயார் செய்து வருகிறார்.
இவர் காலை உணவு திட்டத்தில் சமையல் செய்து மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் உணவை, மாணவ, மாணவிகள் பெற்றோர்களின் வற்புறுத்தலால் சாப்பிடாமல் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவ, மாணவிகளின் செயலால் மன உளைச்சல் அடைந்த சமையலர் இதுகுறித்து தனது மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜோன் கிறிஷ்டி பாய், எட்டயபுரம் வட்டாட்சியர் மல்லிகா, எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது, உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்தம்மாள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் பள்ளிக்கு சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து பள்ளிக்கு வருகை தந்த 11 மாணவர்களுக்கும் உணவுகள் பரிமாறி சாப்பிட அறிவுறுத்தினர். ஆனால் குழந்தைகள் சாப்பிடாமல் அழுது கொண்டே வெகு நேரம் அமர்ந்திருந்தனர். அப்போது பெற்றோர்கள் தரப்பில் சமையலரை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கிராம மக்களின் கோரிக்கை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.
இந்நிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உசிலம்பட்டி கிராமத்துக்கு நேரில் சென்று அங்கு பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் இரண்டு மாணவர்கள் மட்டுமே சாப்பிடுவதாகவும், மற்ற மாணவர்கள் தவிர்ப்பதாகவும் தகவல் வந்தது.
ஆகவே நேரில் ஆய்வு செய்ய வந்தேன். பள்ளி மாணவ, மாணவிகளுடன் பேசினேன். அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், சமையலருக்கும் தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்துள்ளது. அதன் காரணமாகவே சமையலருடன் சண்டை போட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்னைக்கு நாளையே முற்றுப்புள்ளி வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் வேறு எந்த காரணமும் இல்லை” என்றார்.
சமீபகாலமாக பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் சாதிய ரீதியிலான மோதல்கள் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், காலை உணவுத் திட்டத்தில் சாதியின் காரணமாக சில இடங்களில் சமையலர்களை மாற்றும் படி பெற்றோர் வலியுறுத்தும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் சாதியின் காரணமாக சமையலர் சமைத்த உணவு புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சமூக நலத்துறை அமைச்சர் ஆய்வு நடத்தி குழந்தைகள் உணவைத் தவிர்த்ததற்கு பெற்றோர்களின் தனிப்பட்ட விரோதம் தான் காரணம் என விளக்கம் அளித்து உள்ளார்.
இதையும் படிங்க: "ஒரே நாடு.. ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்றவர் கலைஞர் கருணாநிதி" - சரத்குமார் பேச்சு