உலகையே அச்சுறுத்திவரும் கோவிட்-19 பெருந்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை எட்டாயிரத்தை தொட்டுள்ளது. ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 135 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இத்தாலியில் நேற்று மட்டும் 345 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு உயிரிழப்பின் எண்ணிக்கை 2,503 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்றால் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 137ஆக அதிகரித்துள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதேபோன்று தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மாநில அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதன் விளைவாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் மதுபான கடைகள், திரையரங்குகள், கண்காட்சி உள்ளிட்ட அனைத்தும் வருகின்ற 31ஆம் தேதி வரை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிவேகமாகப் பரவிவரும் கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டி சிறப்பு பிரார்த்தனைகளும் ஆங்காங்கே நடந்துவருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டி தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் அருகே உள்ள அரபிக் கல்லூரியில் இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
இது குறித்து மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி முதல்வர் இம்தாத்துல்லாஹ் பாகில் பாக்கவி கூறுகையில், "உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்து அனைத்து மக்களும் சுகவாழ்வு வாழ வேண்டும் என்று இறைவனிடம் சிறப்பு பிரார்த்தனை நடத்தினோம்.
தமிழ்நாடு அரசு அறிவுறுத்தலின்படி தூத்துக்குடியில் உள்ள அரபிக் கல்லூரிக்கு வருகின்ற 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஊருக்குச் செல்வோம், உண்மையே சொல்வோம், உரக்கச் சொல்வோம்' - பாஜகவின் சி.ஏ.ஏ. விழிப்புணர்வு