ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடக்கிறது. தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்திற்கு மத்திய துணை ராணுவ படை பிரிவினரான மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வந்து சேர்ந்தனர். இந்நிலையில், மத்திய துணை ராணுவ படையினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் ஆகியோரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் இன்று நடைபெற்றது.
அப்போது, செய்தியாளபர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா, "ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடக்க இருப்பதை ஒட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவினை சேர்ந்த மூன்று கம்பெனி போலீசார் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர். இவர்கள் தவிர தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் மூன்று கம்பெனியினரும், தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை போலீசார், வெளிமாவட்ட பேலீசார் 600 பேர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் போலீசார் ஆகியோரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
ஓட்டப்பிடாரத்தை சுற்றி 293 கிராமங்கள் உள்ளது. இதை 88 பாகங்களாக பிரித்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர 10 துணை காவல் கண்காணிப்பாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 132 இடங்களில் உள்ள 257 வாக்குச்சாவடி மையங்களில் 51 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அவைகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பான வழக்குகள் மார்ச் 10ஆம் தேதியிலிருந்தே தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் விதிமுறை தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்றார்.