தூத்துக்குடி: கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சோழபுரம் ஊராட்சியில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் கடந்த செப்.8-ஆம் தேதி 'மக்கள் களம்' என்ற மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அதில், கடம்பூர் வட்டாரம், சோழபுரம் பகுதியில் வசிக்கும் ராஜலட்சுமி என்பவரும் மனு அளித்து இருந்தார். அந்த மனுவில் அவர், "தனது 5 வயது பெண் குழந்தைக்கு பேசும் திறன் குறைவாக உள்ளதாகவும், அதை சரி செய்வதற்கு தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறும்" குறிப்பிட்டு இருந்தார்.
அதையடுத்து, அந்த மனுவை பெற்ற எம்.பி. கனிமொழி, உடனடியாக அதை பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவர்களிடம் அறிவுறுத்திள்ளார். அதனைத் தொடர்ந்து, எம்.பி. கனிமொழியின் அறிவுறுத்தலின் படி அடுத்த நாள் (செப்.9) அந்த ஊர் மக்களைத் தேடி மருத்துவக் குழுவினர் சென்றுள்ளனர். ராஜலட்சுமியின் இல்லத்திற்கு சென்ற மருத்துவ குழுவினர், அவரது 5 வயது குழந்தை தேன்மொழியை பரிசோதனை செய்தனர்.
அதையடுத்து குழந்தை தேன் மொழியின் பேச்சு திறனை மேம்படுத்த ஸ்பீச் தெரபி (Speech Therapy) இனி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து, இந்த சிகிச்சை மூலம் குழந்தையின் பேசும் திறன் விரைவில் மேம்படும் என்று மருத்துவ குழுவினர் தெரிவித்ததாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் 'மக்கள் களம்' நிகழ்ச்சியில், பெண் அளித்த கோரிக்கை மனுவை உடனடியாக பரிசீலனை செய்து சிறுமிக்கு மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ள எம்பி கனிமொழிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Thalaivar 171 : ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்கும் லோகேஷ்! உலக நாயகனை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருடன் கூட்டணி!