தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கோவில்பட்டியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, உயர் கல்வி மாணவர்களுக்கு சிம்கார்டு வழங்கும் பணிகள் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு கலந்துகொண்டு கயத்தாறில் 1,449 பயனாளிகளுக்கு 3 கோடியே 77 லட்சம் ரூபாய் நலத்திட்ட உதவிகளையும், கோவில்பட்டியில் 3,391 பயனாளிகளுக்கு 6 கோடியே 73 லட்சம் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
அதேசமயம் கோவில்பட்டி, கயத்தாறு பேரூராட்சியில் 36 லட்சம் ரூபாயில் பல்வேறு தெருக்களுக்கு பேவர் பிளாக் அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர் கடம்பூர் செ. ராஜு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.
மேலும், கோவில்பட்டியில் நடந்த விழாவில், தமிழ்நாடு முதலமைச்சரின் உயர்க் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் காணொலி மூலம் கல்வி பயிலவும், படிப்பதற்குத் தேவையான விவரங்களை இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளவும், தினசரி 2 ஜிபி டேட்டா சிம்கார்டு வழங்கும் திட்டத்தை அமைச்சர் தொடங்கிவைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 27 கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் 19 ஆயிரத்து 740 மாணவ, மாணவிகளுக்கும், 11 பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மூன்றாயிரத்து 971 பேருக்கும், 10 பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் இரண்டாயிரத்து 684 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 26 ஆயிரத்து 395 மாணவ, மாணவிகளுக்கும் இலவச டேட்டா சிம்கார்டு வழங்கப்பட்டது.
மேலும், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட ஊராட்சித் தலைவர் சத்யா எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ”சட்டபேரவை தேர்தலில் மூன்றாவது அணி மலரும்” - கமல்ஹாசன்!