சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்று மாலை 7 மணியுடன் தேர்தல் பரப்புரை முடிவடையும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொழிலதிபர்கள், ஜவுளி நிலைய ஊழியர்களைச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, ஊழியர்களைக் கவரும் வகையில் தையல் இயந்திரத்தில் அமர்ந்து துணிகளை தைத்து வாக்குகள் சேகரித்தார். அவருக்கு ஆதரவாக நடிகரும், இயக்குநருமான ரவிமரியா செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு பரப்புரை செய்தார். இதையடுத்து கோவில்பட்டி பகுதியில் வீதிவிதியாகச் சென்று வாக்கு சேகரித்தார், நடிகர் ரவி மரியா.
பரப்புரையின் போது அவர் பேசுகையில்,’இரண்டாவது பைப்லைன் திட்டத்தைக் கொண்டு வந்தது, அதிமுக அரசுதான். உங்கள் திட்டங்களை நிறைவேற்றும் அரசாக அதிமுக உள்ளது. ஆகையால் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். அண்ணன் கடம்பூர் ராஜூ அவர்களுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிப்பது எனக்கு புண்ணியம். அதிமுகவிற்கு ஆதரவாக 50 தொகுதிகளி வாக்கு சேகரித்தேன்’என்றார்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில்,’கோவில்பட்டி தொகுதியில் நான் அறிவித்த திட்டங்களை என்னைப் பார்த்து காப்பி அடித்து கூறுபவர் டிடிவி தினகரன். நான் ஏற்கனவே மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும்போது கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்தே. அதையே அவர் திரும்ப கூறிவருகிறார். அவருக்கு இங்கு எப்போதும் இடமில்லை’என்றார்.
இதையும் படிங்க:இரவில் விசைத்தறி ஓட்டும் பணி; பகலில் தோழர்களுடன் பரப்புரை - இப்படி ஒரு கம்யூனிஸ்ட் வேட்பாளர்!