தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்ப்பால் சேகரிக்கும் அமிர்தம் தாய்ப்பால் வங்கியை இன்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இன்று (பிப்ரவரி 22) திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த தாய்ப்பால் வங்கியின் மூலமாக தாய்ப்பால் இல்லாமல் குழந்தைகள் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க முடியும். குழந்தைகள் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்பதற்காக மகப்பேறு சஞ்சீவி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு நாட்டுக்கு முன்மாதிரியாக செயல்படுத்தி வருகிறது.
தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் மூலமாக தொடங்கப்பட்டுள்ள இந்த தாய்ப்பால் வங்கியில் ஆறு மாத காலம் வரை 200 லிட்டர் தாய்ப்பாலை சேமித்து வைக்க முடியும். கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செயல்படுத்த முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சொன்ன போதும் கடன் தள்ளுபடியை முறையாக செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் கடன் தள்ளுபடி பத்திரத்தை இன்று அனைவருக்கும் வழங்க உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 181 கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட உள்ளது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்கும்" என்றார். பின்னர் தமிழ்ச்சாலை என பெயரிடப்பட்டுள்ள தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையின் பெயர் பலகையை அவர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கே. செந்தில்ராஜ், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி பாலன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சரண்யா அரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு பாராட்டு விழா!