தூத்துக்குடி: கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று (செப். 23) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து இயற்கை மரணம் நிதியுதவி திட்டத்தில் 11 பேருக்கு தலா ரூ.17 ஆயிரம், ஒருவருக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.1000, 23 பேருக்கு திறன்பேசி உதவி உள்ளிட்ட ரூ.4.99 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து கோவில்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அண்ணா பேருந்து நிலையத்திற்கு இரவு நேரங்களில் கூடுதல் பேருந்து சேவையை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் கோவில்பட்டி நகராட்சியில் ‘எனது குப்பை எனது பொறுப்பு’ திட்டத்தில் தூய்மை பணியை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது
தொடர்ந்து கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் 'கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில்' விடுபட்ட பயனாளிகளுக்கு மறுவிண்ணப்பங்கள் செய்யப்பட்டு வருவதை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் வரை இரவு நேரங்களில் சர்குலர் பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: அண்ணாமலையை நீக்க வேண்டும்..! அதிமுக போட்ட கண்டிஷன்..! பாஜகவின் ரியாக்ஷன் என்ன..?
அதன் அடிப்படையில் அவர்களுக்கான சேவை தொடங்கப்பட்டுள்ளது. எந்தவித பாதிப்பும் இல்லாமல் இந்த சர்குலர் பஸ் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து பணிமனை மேலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் உரிமைத் தொகைக்காக மேல்முறையீடு செய்ய வரும் பெண்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அதிகாரிகள் கனிவுடன் நடந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது 'வரும் ஆனா வராது' என்று தான் சொல்வேன். ஏனென்றால் எந்த ஒரு அடிப்படை செயலையும் செய்யாமல் அதாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யாமல் வரைமுறைப்படுத்தப் போகிறோம் என்கிறார்கள்.
அதனால் இது கண்துடைப்புக்காக 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை நோக்கி இதை தாக்கல் செய்துள்ளனர். வந்தால் மகிழ்ச்சிகரமான விஷயம் தான், ஆனால் இதை பெண்கள் நலனுக்காக செய்யலாம், ஆனால் செய்யவில்லை தேர்தலுக்காக செய்கின்றனர்" என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.
இதையும் படிங்க: ‘பால் பொருள்களை கண்ணாடி பாட்டிலில் வைத்து விற்பனை செய்யக்கோரி மனு’ - விரைவில் விசாரணை!