மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவர்கள் நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மருத்துவ படிப்பில் நெக்ஸ்ட் நுழைவுத்தேர்வை புகுத்தக்கூடாது, இணைப்பு படிப்புகளை கொண்டுவரக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவகல்லூரி மாணவர்கள் சங்க மாணவி ஆனந்தி கூறுகையில், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெறக்கூடாது. இந்திய மருத்துவக் கழகத்தை ஒழிக்க கூடாது, வரைவு தேசிய கல்விக் கொள்கை 2019ஐ திரும்பபெற வேண்டும்.
மேலும் நவீன அறிவியல் மருத்துவப் படிப்பை படிக்காதோர், மருத்துவராக பணி செய்ய உரிமம் வழங்கக் கூடாது. மருத்துவக் கல்வியை கார்ப்பரேட், வணிகமயமாக்கக் கூடாது ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நாளைய தினம் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் அமைதி பேரணியில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.