தூத்துக்குடி: தென் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னையில் இருந்து காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்த தமிழ்நாடு மு.க.ஸ்டாலின் இன்று காலை நெல்லையில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பின்னர், கோவில்பட்டியில், உள்ள திட்டங்குளம் தீப்பெட்டி தொழிற்சாலையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு, அத்தொழிற்சாலையில் நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாடு கோவில்பட்டி, சாத்தூர் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், ஆல் இந்தியா சேம்பர் சங்கம் ஆகிய 4 சங்க பிரதி நிதிகளுடனும், குறைகளை கேட்டறிந்தார்.
சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகளான, தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, மற்றும் வேலூர் மாவட்டங்களில் கடந்த 80 ஆண்டுகளாக பல லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு தீப்பெட்டி தொழில் வாழ்வளித்து வருகிறது. இத்தொழிலில், 90 சதவிகிதம் பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நம் தேசத்தின் 90 சதவீதம் தீப்பட்டியும் தேவை மட்டும் அல்லாது உலக நாடுகள் 40 சதவீகிதம் தேவையும் தமிழ்நாட்டில் பற்றி உற்பத்தி நிறுவனங்களால் பூர்த்தி ஆகிறது.
இதற்கு முன்பு சீனாவில் இருந்து தீப்பெட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டபோது கலைஞர் சீன தீப்பட்டிகளுக்கு நிரந்தர தடையை பெற்று தந்தார். அந்த தடை இன்று வரை தொடர்கிறது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். மேலும், அவர்களுடைய கோரிக்கைகளான, தீப்பெட்டி தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இவை தற்போது நூற்றுக்கணக்கான கண்டெனர்கள் இறக்குமதி செய்யப்படுவது மட்டுமில்லாமல், மியான்மர் வழியாக சட்டவிரோதமாகவும் கொண்டுவரப்படுகிறது. பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த தீப்பெட்டி தொழிலை காக்கும் வகையில் சீன லைட்டர்களுக்கு இந்திய அரசின் மூலமாக நிரந்தர தடையைப் பெற்றுத் தர வேண்டும்.
தீப்பெட்டி உற்பத்திக்குத் தற்போது உள்ள படைகலச் சட்ட உரிமத்தை 5 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்று நடைமுறை மாற்றி வாழ்நாள் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர்புறங்களில் இருந்து கிராமப்புறங்களில் தொழில் துவங்குவதற்கு உள்ளாட்சி நிர்வாகம் கட்டிடம் கட்டுவதற்கு வழங்கும் 2000 சதுர அடி என்ற வரைமுறையை அதிகப்படுத்தி 10,000 சதுரடி வரை அனுமதி வழங்க வேண்டும்.
தொழில் செய்யும்போது எதிர்பாராமல் ஏற்படும் சிறு சிறு விபத்துக்களால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கும், உயிரிழப்பிற்கும், உரிமையாளர்கள் மீது பதியப்படும் வழக்குகளுக்கு காவல் நிலையத்தில் பிணை வழங்க ஆவணம் செய்ய வேண்டும். தீப்பெட்டி தயாரிப்பு முக்கிய மூலப்பொருளான பொட்டாசியம் குளோரைட் பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து குறிப்பிட்ட சில கம்பெனியில் இருந்து பொட்டாசியம் குளோரைட் வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.
அவ்வப்போது தட்டுப்பாடு ஏற்படுத்தி விலை ஏற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு எங்கள் உற்பத்தியாளர்கள் ஒன்று சேர்ந்து மத்திய, மாநில அரசுகளின் உதவிகளோடு கிளஸ்டர் முறையில் பொட்டாசியம் குளோரைடு உற்பத்தி தொழிற்சாலை அமைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். எனவே மானிய விலையில் மின்சாரம் வழங்கிட ஆவணம் செய்ய வேண்டும். என்ற கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் முன் வைத்தனர்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும், முதலமைச்சர் தொழிற்சாலை ஊழியர்களுடன் குறைகளை கேட்டறிவார் என 200க்கும் மேற்பட்டோர் காலையிலே அமர வைக்கப்பட்டனர். அவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கலந்துரையாடதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.
இதையும் படிங்க:நல்லிணக்கம் வலுப்பெறட்டும் - பிரதமர் ஓணம் வாழ்த்து