தூத்துக்குடி:முழு ஊரடங்கு காரணமாக தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், 50 விழுக்காடு தொழிலாளர்களுடன் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தொழிற்சாலைகளில் பணி தொடக்கம்
இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம் சிவகாசி, தென்காசி, தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட முழு இயந்திர தொழிற்சாலைகளும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சார்பு தொழிற்சாலைகளும் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.
அரசு அறிவித்துள்ள 50 சதவீதம் தொழிலாளர்களுடன் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்குகிறது.
தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் கோரிக்கை
"குச்சி, மெழுகு அட்டை குளோரைட் ஆகிய மூலப்பொருள்கள் பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து பெறப்பட்டு தீப்பெட்டி தயாரிக்கப்படுகிறது.
பல மாநிலங்களில் ஊரடங்கு தொடர்வதால் தற்போது இருக்கும் மூலப்பொருள்கள் வைத்து ஒரு வார காலத்திற்கு மட்டுமே தீப்பெட்டி உற்பத்தி செய்யமுடியும் எனவும், மேலும் தீப்பெட்டி உற்பத்தி செய்ய தடையின்றி மூலப் பொருள்கள் கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.