திருச்செந்தூர்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில், மாசித்திருவிழா நாளை தொடங்குகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணியளவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறுகிறது.
காலை 5 மணிக்கு மேல் 5.30-க்குள் கோயில் செப்பு கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நாட்களான 5-ம் திருநாள் மார்ச் 1-ம் தேதி இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோயிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் குடவருவாயில் தீபாராதனையும், 7-ம் திருநாளான 3-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 5 மணிக்கு உருகு சட்டசேவையும் நடக்கிறது.
காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் சிகர நிகழ்ச்சியாக மார்ச் 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். 11-ம் திருநாளான மார்ச் 7-ம் தேதி, தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.
இதையும் படிங்க: காலநிலை மாற்றத்தால் மீண்டும் உறை பனிப்பொழிவில் சிக்கித்தவிக்கும் நீலகிரி