ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் 2018 மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூடு, தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு மே 28ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இதையடுத்து இந்த ஆலை மூடி சீல்வைக்கப்பட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை பசுமைத் தீர்ப்பாயம் விசாரிக்கும்போது, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது; ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டது. இந்தக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.
இதை எதிர்த்து மீண்டுமாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்துசெய்தது. மேலும், தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லாது எனக் கூறும் அதிகாரம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு கிடையாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை ஆதரிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டமே இன்று (ஆக18) கொண்டாட்ட களமானது. கோவில்பட்டியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இணைந்து கோஷமிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமையில் இந்நிகழ்வு அரங்கேறியது.
இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் கதிரேசன், வழக்கறிஞர் மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இதையும் படிங்க:'ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு: நீதிக்கு கிடைத்த வெற்றி' - வைகோ