திருச்செந்தூர்: சுப்பிரமணிய சுவாமி கோயில் அர்ச்சகர் சீதாராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், "கோயில்களின் சிலைகளின் பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களினால் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சில கோயில்களில் சிலைகள் திருட்டு போன சம்பவங்களும் நடந்துள்ளது. எனவே, திருச்செந்தூர் கோயிலின் உள்ளே மொபைல் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்,
”கோயில் உள்ளே அர்ச்சகர்களே புகைப்படங்கள் எடுத்து அவருடைய தனிப்பட்ட யூடியூப் சேனலில் பதிவிடுகிறார், இது ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் சத்திரமா?. கோயிலுக்கு வரும்போது அநாகரிகமான உடைகள் அணிந்து சுற்றுலா தளங்கள் போல் மக்கள் வருவது வேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது. இது மாற்ற பட வேண்டும்.
திருச்செந்தூர் கோயிலின் உள்ளே செல்போன் பயன்படுத்தினால், அதனை பறிமுதல் செய்து மீண்டும் ஒப்படைக்க கூடாது. கோயிலின் வாசலிலேயே சோதனை மையம் அமைத்து, செல்போன் டிடெக்டர் வைத்து பரிசோதனை செய்தே பின்னரே அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள உத்தரவுகளை உடனடியாக நிறைவேற்றுவது குறித்த சுற்றறிக்கையை, அறநிலையத்துறை ஆணையர் அனுப்ப வேண்டும். இந்த சுற்றறிக்கையின் நகலை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ஒரே நாளில் வரும் கார்த்திகை தீபம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினம்; திருவண்ணாமலையில் ஐஜி ஆய்வு...