தூத்துக்குடி: குலசேகரன்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஞானமூர்த்தீசுவரர் சமதே முத்தாரம்மன் திருக்கோயில் அமைந்து உள்ளது. ஆண்டுதோறும் நவராத்திரியை முன்னிட்டு முத்தாரம்மன் கோயிலில் பத்து நாட்கள் தசரா பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
தீரா உடல் நல பாதிப்பில் இருந்து விடுவிப்பு, குடும்ப நலன், கடன் தொல்லை நீங்க உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை ஏற்று இந்த திருவிழா நாட்களில் வேடமணிந்து தானம் பெற்று அதை அம்பாளுக்கு செலுத்தினால் அனைத்து பிணியும் நீங்கும் என பக்தர்கள் நம்பிக்கை கொள்கின்றனர். அதற்காக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழா நாட்களில் நோன்பு இருந்து வேடம் தரித்து தானம் எடுத்து அதை அம்பாளுக்கு செலுத்தி வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டும் தசரா திருவிழா கடந்த 15ஆம் தேதி கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 9 நாட்களாக தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்நிலையில், 10வது நாளான நேற்று (அக்.24) சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களிலும் இருந்து காப்பு கட்டி விரதம் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக காளி, அனுமன், கிருஷ்ணர், ராமர், குரங்கு, கரடி, சிங்கம், முருகன், விநாயகர், பிச்சைக்காரன், போலீஸ் போன்ற பல்வேறு வேடங்களை அணிந்தும், பக்தர்கள் தசரா குழு அமைத்து பொதுமக்களிடம் எடுத்த காணிக்கையை உண்டியலில் போட்டும் அம்மனை வணங்கி வழிபட்டனர்.
தொடர்ந்து, முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோயிலுக்கு முன்பாக எழுந்தருளி கடற்கரை மைதானத்தில் மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
முதலில் தன்முகமாக வந்த மகிஷாசூரனை வதம் செய்த முத்தாரம்மன், அடுத்ததாக யானை முகத்துடனும், எருது முகத்துடனும், சேவல் உருவிலும் வந்த மகிஷாசூரனை வதம் செய்தார். அப்போது "ஓம் காளி.. ஜெய் காளி" என்று பக்தர்கள் எழுப்பிய கோஷம் விண்ணை பிளந்தது. பின்னர், முத்தாரம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.
மேலும், இந்த தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் சீருடை காவலர்கள், குற்றப்பிரிவு காவலர்கள் மக்களோடு மக்களாக கலர் சீருடை காவலர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
70 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு முக்கியமான பகுதிகளை போலீசார் கண்காணித்தனர். மேலும் 3 தற்காலிக பேருந்து நிலையங்கள், பக்தர்கள் எளிதாக வந்து செல்ல சுமார் 200 சிறப்பு பேருந்துகள் அனைத்து வழித்தடங்களுக்கும் இயக்கப்பட்டன. நவராத்திரி திருவிழா நிறைவு பெற்ற நிலையில், பக்தர்கள் அனைவரும் இன்று (அக். 25) மாலை காப்பு அறுத்த பின், தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இனிதே நிறைவுற்ற தஞ்சை பெரிய கோயில் நவராத்திரி விழா! ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!