தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர், முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. தசரா பண்டிகைக்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனுக்காக விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து கோயிலுக்கு வந்து அம்மனை வழிபடுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 10 நாட்களாக தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 10ஆம் திருவிழாவான நேற்று (அக்.26) காலை அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இரவு 10 மணிக்கு அம்மனுக்கு மகா அலங்கார பூஜையைத் தொடர்ந்து, 12 மணிக்கு கோயில் முன்புறம் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார்.
இதையடுத்து மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி கோயில் சுற்றுப்பிரகார மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. முதலில் தன்முகமாக வந்த மகிஷாசூரனை வதம் செய்த முத்தாரம்மன், அடுத்ததாக யானை முகத்துடனும், எருது முகத்துடனும் வந்த சூரனை வதம் செய்தார். அடுத்து சேவல் உருவில் வந்த மகிஷாசூரனையும் வதம் செய்த முத்தாரம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. வரலாற்றில் முதன்முறையாக பக்தர்கள் இன்றி இந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான அனுமதி நேற்று இரவு 8 மணியுடன் நிறைவுபெற்றது.
இதையும் படிங்க:குமரி பகவதியம்மன் கோயில் நவராத்திரி பரிவேட்டை