தூத்துக்குடி: பதவி ஏற்று ஒரு மாதமே ஆன நிலையில் லஞ்சம் வாங்கியதற்காக கோவில்பட்டி தாசில்தார் கைது செய்யப்பட்டு உள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மே மாதம் 5-ந்தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் 31 தாசில்தார்களை இடமாற்றம் செய்தார். அதன்படி, கோவில்பட்டி தாசில்தார் சி.சுசிலா ஓட்டப்பிடாரம் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் நிலம் எடுப்பு தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக கோவில்பட்டி தாசில்தாராக விளாத்திகுளம் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் நிலம் எடுப்பு தனி தாசில்தார் யு.வசந்த மல்லிகா நியமிக்கப்பட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து வசந்த மல்லிகா கோவில்பட்டி தாசில்தாராக பதவி ஏற்றார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ராஜாராம் (64) என்பவர் விமான நகர் பகுதியில் உள்ள வீட்டு மனையில் வீடு கட்டுவதற்கு தடையில்லா சான்று வழங்க தாசில்தாரை சந்தித்து கோரிக்கை விடுத்தார். அதற்கு தாசில்தார் வசந்த மல்லிகா ரூ.30ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜாராம் இது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்த நிலையில், தாசில்தார் வசந்த மல்லிகாவை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர்.
இதையும் படிங்க: ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு லண்டனில் கத்திக்குத்து; பிரேசில் இளைஞர் கைது!
அதன்படி ராஜாராமிடம் ரூ.30 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர். இன்று (ஜூன் 14) மதியம் ராஜாராம், தாசில்தார் வசந்த மல்லிகாவை சந்தித்து லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது ஏற்கனவே அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி. பீட்டர் பால் தலைமையிலான போலீசார், தாசில்தார் வசந்த மல்லிகாவை கையும் களவுமாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த கார் ஓட்டுநர் கிருஷ்ணன் என்பவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாசில்தார் வசந்த மல்லிகா பதவி ஏற்று ஒரு மாத காலமே ஆன நிலையில் லஞ்சம் வாங்கியதாக இன்று கைது செய்யப்பட்டது அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ராணிப்பேட்டையில் சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் இருவர் கைது