தூத்துக்குடி: அச்சகத் தொழிலாளி கொலை குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.
கோவில்பட்டி ஏகேஎஸ் தியேட்டர் சாலையில் வசித்துவருபவர் ராம்குமார் (32). இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் அச்சகத்தில் தொழிலாளியாகப் பணிபுரிந்துவருகிறார். இச்சூழலில் பணி முடிந்து வீட்டிற்கு நடந்து வரும்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென ராம்குமாரை வழிமறித்து தகராறு செய்தனர்.
தகராறு முற்றவே திடீரென தாங்கள் மறைத்துவைத்திருந்த கத்தியால் ராம்குமாரைச் சரமாரியாக நெஞ்சில் குத்தி கொலைசெய்தனர். இதனால் சம்பவ இடத்திலேயே ராம்குமார் துடிதுடித்து உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் கலைகதிரவன், ராம்குமாரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.
இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் விசாரணை நடத்தியபோது, அங்கிருந்த கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகளை எடுத்துள்ளனர். தற்போது அந்தப் பதிவுகளைக் கொண்டு விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளனர்.