தூத்துக்குடி: கோவில்பட்டி மெயின் ரோடு சாந்தி மெடிக்கல் அருகே 9 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நிழற்குடை அமைந்துள்ளது. இந்த நிழற்குடையின் மதிப்பு 9 லட்சம் ரூபாய் என கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை யாரும் பயன்படுத்தமுடியவில்லை என்று பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டிற்கிணங்க இந்த நிழற்குடையை ஈடிவி பாரத் சார்பாக அங்கு களத்தில் இறங்கினோம்.
நிழற்குடையின் உள்ளே சென்று அமர சென்ற போது கடுமையான துர்நாற்றம். ஆம், 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிழற்குடையை, மினி சிறுநீரக கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிழற்குடையின் பின்புரம் மூக்கை மூடியவாறு நிழற்குடையின் அருகில் ஒரு கல்வெட்டை பார்த்தபோது அந்த கல்வெட்டில், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கோவில்பட்டி நகராட்சி, மெயின் ரோடு சாந்தி மெடிக்கல் அருகில் பயனியற்நிழற்குடை அமைத்தல் ஆண்டு 2021-2022 மதிப்பீடு 9 லட்சம் ரூபாய் ஒப்பந்தகாரர் V. கிருஷ்ண மூர்த்தி என பொறிக்கப்பட்டு இருந்தது.
இதனை பார்த்தவுடன் அதிர்ச்சி, காரணம் மது பிரியர்கள் மது அருந்தவும், சிறுநீரகம் கழிப்பதற்கும் 9 லட்சமா என்று.. இங்குள்ள நிழற்குடையை யாரும் பயன்படுத்தாத நிலையில், சிறிது நேரம் அங்கு நின்று கொண்டு யாரும் வருவார்களா என எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தோம். ஆனால் அங்கு யாரும் வரவில்லை.
அந்த நிழற்குடையில் இருந்து 100 மீட்டர் தூரம் தள்ளி பெண்கள் நின்று கொண்டிருந்தனர். பேருந்தும் அங்கு தான் நின்றது. அப்போது அருகில் இருந்த ரோட்டோர கடைக்காரரிடம் இது குறித்து கேட்கையில், பல மாதங்களாக இவ்வாறு தான் உள்ளது. இதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க நிர்வாகத்தினர் மறுக்கின்றனர் என குமுறினார். அந்நேரத்தில் அங்கு சென்ற ஒரு இளைஞரிடம் இது பற்றி கேட்டோம்.
அவர் கேட்டவுடன் பொங்கி எழுந்து விட்டார். ஆம் அவர் நம்மிடையே பகிர்ந்து கொண்ட அந்த அனல் பறக்கும் பேட்டி, “இந்த நிழற்குடை அமைத்த ஆண்டு 2020-2021 என கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2022- 2023 என்று பேருந்து நிலைய மேற்கூறையில் உள்ளது. இந்த நிழற்குடையில், யாரும் அமர முடியாத சூழ்நிலை உள்ளது. இதன் பின்புரம் சிறுநீர் கழிக்கின்றனர். அருகில் மது பிரியர்களும் மது அருந்துகின்றனர்.
நகராட்சி நிர்வாகம், சட்டப்பேரவை உறுப்பினரான கடம்பூர் ராஜூ நேரடியாக இந்த இடத்தை ஆய்வு செய்ய வேண்டும். மேலும், கல்வெட்டில் வேறு வருடம், நிழற்குடையில் வேறு வருடம் என உள்ளது. ஆகவே, இதற்கான வரவு, செலவு கணக்கு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பயன்படுத்த முடியாமல் இருக்கும் இந்த நிழற்குடைக்கு 18 லட்சமா?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், போதுமான வசதி எதுவும் இல்லை. தினம் இங்கு வருகிறேன் மிக சங்கடமாக உள்ளது. மகளிர் , கல்லூரி பெண்கள் அனைவரும் இந்த நிழற்குடையில் நிற்பதில்லை. அனைவரும் 100 மீட்டர் தாண்டி தான் பேருந்து ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது. 9 லட்சத்திற்கு எந்த ஒரு பயனும் இல்லாமல் உள்ளது. ஆகவே, நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
இது குறித்து கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜூவிடம் தொலைபேசி வாயிலாக கேட்கையில், “அது பேசாட்டி இருந்து விட்டு போகுது. எது இருந்தால் என்ன” என முதலில் கூறினார். பின்னர், நிழற்குடைக்கு ரூ. 9 லட்சமா? என கேள்வி எழுப்பியபோது, அது குறித்து எனக்கு தெரியவில்லை என்றும், திறந்தாயிற்று அதை லிஸ்ட்-ல் பார்த்தா தான் தெரியும் எனவும் பேருந்து நிலையத்தில் பெண்கள் நிற்கமுடியவில்லை என கூறியவுடன் சரி நிறுத்த சொல்வோம் என கூறி போனை துண்டித்தார்.
இதையும் படிங்க: அணையில் நுரை பொங்கி வரும் ரசாயன கழிவுகள் - ஆபத்தை உணராத குழந்தைகள்!