தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் மத்திய அரசுக்கு சொந்தமான கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில், தீபாவளி, தசரா திருவிழா சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று (அக.19) தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப் நந்தூரி, "இந்த ஆண்டு தசரா விழா, தீபாவளியை முன்னிட்டு கோ ஆஃப்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய ரக சேலைகள், பட்டு சேலைகள், ஆர்கானிக் சேலைகள், இளைஞர்கள், சிறுவர்களுக்குத் தேவையான ஆடைகள் ஆகியவை 30 விழுக்காடு தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன.
கோ-ஆப்டெக்ஸில் துணி வாங்குவதன் மூலம் விற்பனை பயன் நேரடியாக நெசவாளர்களுக்கு சென்று சேர்கிறது. தூத்துக்குடியில் உள்ள இரண்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களில் கடந்த ஆண்டு 2.15 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி விற்பனை நடைபெற்றது.
அதேபோல் இந்த ஆண்டு விற்பனை இலக்கு 2.35 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி மண்டலங்களில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனை இலக்கு 20 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் 2,096 பேர் முறைகேடாக பதிவு செய்து பணம் பெற்றுள்ளனர். மொத்தம் 77 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் முறைகேடாக தகுதி இல்லாத நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து பணத்தை திரும்பப் பெறும் நடவடிக்கைகளை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அதில் 66 லட்ச ரூபாய் இதுவரை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
எனவே மொத்த தொகையில் 86 விழுக்காடு பணம் திரும்ப பெறப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள நபர்களிடமிருந்தும் பணம் திரும்பப் பெறும் நடவடிக்கையை அலுவலர்கள் கவனித்து வருகின்றனர். குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு நாளொன்றுக்கு 8,000 பேர் தரிசனம் செய்ய திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நேரத்திற்குள் பக்தர்கள் விரைவாக தரிசனத்தை முடித்துக் கொண்டார்கள் எனில் கூடுதலாக பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: மானிய விலை இரு சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி - அமைச்சர் காமராஜ் பங்கேற்பு!