தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம்போல் வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளம் சூழ்ந்துள்ள வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து வெள்ளம் பாதித்த பகுதிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது பொதுமக்கள் வெள்ளநீரை வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி கனிமொழியிடம் முறையிட்டனர்.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகர ஆணையாளர் ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் ஆகியோருடன் கனிமொழி எம்பி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், தூத்துக்குடியில் யாரும் எதிர்பாராதவிதமாக அதிகப்படியான அளவு மழை பெய்துள்ளது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தை அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையாளர் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதில் வெள்ளத்தை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். மேலும் தண்ணீர் உறிஞ்சும் மோட்டார்களும் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தற்காலிகமாக கூடுதல் நிவாரண முகாம்கள் அமைத்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெறச் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்தி இருந்தாலே தற்போது இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது. அதனாவேயே இந்த விளைவு ஏற்பட்டுள்ளது என்றார்.