விழுப்புரம்: தெற்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று, சனிக்கிழமை (நவம்பர் 23) கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற வனத்துறை அமைச்சர் பொன்முடி, சமூகநீதி போராளிகள் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு, பாமக நிறுவனர் இராமதாசுக்கு மற்றும் சமூகநீதிப் போராளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி பேசியதாவது, "விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் கட்சி மற்றும் அரசு விழாக்களில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 28-ஆம் தேதி வருகிறார். மேலும், விழுப்புரம் புறவழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள 21 சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபம், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் நினைவு அரங்கம் மற்றும் ஏனாதிமங்கலத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு ஆகியவற்றை நவம்பர் 29-ஆம் தேதி முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.
இதையும் படிங்க: திருப்பதி லட்டு விவகாரம்: அதிகாலை 2 மணிவரை சோதனை; பல ஆவணங்களை எடுத்துச் சென்ற ஆந்திர குழு?
பாமக நிறுவனர் இராமதாசுக்கு அழைப்பு: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுகதான் வெற்றி பெறும். அதற்குரிய நிலையை நாம் உருவாக்க வேண்டும். மேலும், நவம்பர் 29ஆம் தேதி நடைபெறும் ஏ.கோவிந்தசாமி நினைவரங்கம் மற்றும் 21 சமூகநீதி போராளிகள் மணிமண்டப திறப்பு விழாவுக்காக அச்சிடப்படும் அழைப்பிதழில், பாமக நிறுவனர் இராமதாசு பெயரும் இடம்பெறும். 21 சமூகநீதிப் போராளிகளின் குடும்பத்தினரும் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும்," என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.