தூத்துக்குடி: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் செக்காரைக்குடி வ.உ.சி திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு கருங்குளம் ஒன்றியச் செயலாளர் லட்சுமண பெருமாள் தலைமை வகித்தார்.
இதில் கலந்து கொண்ட முன்னாள் அதிமுக அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ பேசுகையில், “திமுக ஆட்சி வந்ததும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினார்கள். ஆனால் அது வரவில்லை.
கூட்டுறவு சங்கங்களில் ஐந்து பவுனுக்கு குறையாக வைத்தவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி என கூறினார்கள். அதனை நம்பி நகை வைத்த மக்களுக்குத்தான் ஏமாற்றம். இதில் 15 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி எனக்கூறி, 40 லட்சம் பெண்களுக்கு நாமம் போட்ட ஆட்சிதான் இந்த திமுக ஆட்சி.
தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திய ஆட்சி, திமுக ஆட்சி. இது மக்களுக்கு விடியா ஆட்சி. திமுக ஆட்சிக்கு வந்தாலே வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிடும். அதனால்தான் தமிழ்நாட்டில் ஆங்காங்கே வெடிகுண்டு சம்பவம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டது. இது தீவிரவாத நாட்டில் இருப்பதுபோல் உள்ளது.
தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கஞ்சா போதை பொருட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. 2024 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரும். அப்போது 40 இடங்களில் நாடாளுமன்றத்தில் அதிமுக வெற்றி பெறும். மீண்டும் சட்டசபை தேர்தல் வந்தால், அதிமுகதான் வெல்லும்” என கூறினார்.
இதையும் படிங்க: அண்ணா சிலை அவமதிப்பு வழக்கு - பாஜகவை சேர்ந்த 3 பேர் கைது