தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ, கோவில்பட்டி பகுதியில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக அதிமுக, அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவுகேட்டு தேர்தல் பரப்புரையைத் தொடங்கிவுள்ளார்.
கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அவர், கரடிகுளம், துரைச்சாமிபுரம், துலுக்கர்பட்டி என பல்வேறு கிராமங்களுக்கு வாகனத்தில் சென்று மக்களிடையே வாக்கு சேகரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு அரசு கிராம பகுதிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது. அந்தச் சாதனையை முன்னிறுத்தி வாக்கு சேகரித்துவருகிறோம். செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் சிறப்பான வரவேற்பு தருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் சிறப்பான வெற்றி பெறுவோம்” என்றார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ”ஒரு பிரச்னையில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கருத்தோடு அணுகுவார்கள். தனிப்பட்ட முறையில் கருத்துக் கூறுவது அவர்களின் விருப்பத்தை பொறுத்தது. நாங்கள் ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். ஒரு சட்டம் கொண்டு வந்தால் அதைப் பற்றி விவாதிக்கலாம் நாடாளுமன்றம், சட்டப்பேரவை ஆகியவை அதற்காகத்தான் உள்ளன. ஆனால், மக்கள் உணர்வுகளைத் தூண்டி வன்முறைக்கு கொண்டு சென்று மக்களைத் திசை திருப்புவதை எந்த அரசியல் கட்சி செய்தாலும் அது கண்டிக்கத்தக்கது” என்றார்.
இதையும் படிங்க: குடியுரிமைத் திருத்தச் சட்டம்: வன்முறை ஒரு தீர்வு ஆகாது - ரஜினிகாந்த்