தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அம்மா உணவகத்தை விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்துவைத்தார். அப்போது அவருடன் மாவட்ட துணை ஆட்சியர் விஷ்ணு சந்திரன், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், வருவாய் கோட்டாட்சியர் விஜயா, நகராட்சி ஆணையர் ராஜாராம், வட்டாட்சியர் மணிகண்டன், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் நேரங்களில் யார் வேண்டுமானாலும் தங்களது விருப்பப்படி கூட்டணி அமைத்துக்கொள்ளலாம், தடைபோட முடியாது. ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர் இன்றுவரை தனது கட்சியை பதிவு செய்யவில்லை. மார்ச் ஒன்றாம் தேதிதான் தேர்தல் நடைமுறையை அதன் ஆணையம் அறிவிக்கும்.
புதிய கட்சிகள், கூட்டணிகள் உருவாகலாம் அதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. எங்களைப் பொறுத்தவரையில் மக்களுடன்தான் கூட்டணி. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் ஜெயிக்க முடியும் என்று நிரூபித்த ஒரே கட்சி அதிமுகதான். இதை ஜெயலலிதா சாதித்துக்காட்டினார். அதே வலிமையுடன் அம்மா இல்லாவிட்டாலும் தெய்வமாக இருந்து எங்களை வழிநடத்தி செல்வார்.
அதிமுகவை பொறுத்தவரை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களை விரும்பி வரும் கட்சிகளோடு கூட்டணி வைப்போம். கண்டிப்பாக அதில் வெற்றி பெறுவோம்" என்றார்.
இதையும் படிங்க: சிலிண்டர் விலை உயர்வுக்கு புதுச்சேரி முதலமைச்சர் கண்டனம்