தூத்துக்குடி: கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ இன்று (ஜன.6) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதிய மழையின்றி பயிர்கள் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
காட்டுப்பன்றியினால் சீவலப்பேரி, கயத்தார் உள்ளிட்ட பகுதிகளில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதுகுறித்து பல முறை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிமுக - பாமக கூட்டணி: எட்டுவழிச் சாலை திட்டம் (Eight-lane road projects in TN) விவகாரத்தில், திமுக இரட்டை வேடத்தை போடுகிறது. அம்மா மறைவிற்குப் பின்பு அதிமுக அழிந்துவிடும் என்று கூறிவந்தவர்கள் மத்தியில், எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்தார். அடுத்து எந்த நேரத்திலும் தேர்தல் வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும். கூட்டணியானது, தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று அன்புமணி கூறியுள்ளார். எனவே, தொடர்ந்து பாமக - அதிமுக கூட்டணியில் உள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக தலைமையில் தான் கூட்டணி. பாமக, மதிமுக உள்ளிட்ட அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு எல்லாம் அங்கீகாரம் கொடுத்தது, அதிமுக தான். அண்ணாமலை பத்திரிகையாளரிடம் நடந்து கொள்ளும் விவகாரம் குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசி, அவரை அவரே அசிங்கப்படுத்திக் கொண்டார்.
அமைச்சருக்கு கருப்புக் கொடி: ஆசிட் வீச்சின்போது, தனது முகம் பாதிக்கப்பட்டபோது, நேரடியாக சென்று அவரைப் பார்த்து உரிய சிகிச்சையும், அவர் உயிரை காப்பாற்றியதும் ஜெயலலிதா தான். மறைந்த தலைவர் ஜெயலலிதா பற்றி பேசியது மிகவும் கண்டனத்திற்கு உரியது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட பகுதிக்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வந்தால், அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்துவோம்' என்று கூறினார்.
இதையும் படிங்க: 'தமிழ்நாடு என்பதே சரியான வார்த்தை' - ஆளுநரின் பேச்சுக்கு விளக்கமளித்த அமைச்சர் பொன்முடி