திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வை எதிர்த்து விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இந்த பரப்புரை பயணத்தின் தொடக்க நிகழ்ச்சிக்காக விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "மருத்துவக்கல்வி சேர்க்கைக்கு நீட் தேர்வு எழுதவேண்டும் என்ற நிலையை உருவாக்கி ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, கிராமப்புற மாணவ-மாணவிகளின் மருத்துவ கனவை கலைத்துள்ளனர். இதனால் ஏழு பேருக்கு மேல் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வில் குறைந்தபட்சம் தமிழ்நாட்டிற்காவது விலக்கு கொடுக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டங்கள் இருந்தும்கூட அதை பொருட்படுத்தாமல் நீட் தேர்வை புகுத்தினர்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "நீட் தேர்வு மூலம் பல ஊழல்களும் ஆள்மாறாட்டங்களும் நடக்கின்றன. நீட் தேர்வு விலக்குக்கு இரண்டு முறை சட்டம் இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு எந்த விளக்கமும் தரவில்லை. மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு தலையாட்டி கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு நீட் தேர்வு விவகாரத்தில் உறுதியான முடிவை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை மூலம் 5, 8, 9 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முறையை கொண்டு வர முயற்சிக்கிறது. இதனால் கல்வி இடைநிற்றல் அதிகமாகும் சூழ்நிலை உள்ளது. பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்புவதற்கு நடிகர் ரஜினிகாந்த் உரிய விலையை கொடுப்பார்” என்றார்.
இதையும் படிங்க: