மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி பகுதியில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 7) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு பாரதி நகர் பகுதி மக்களின் உறவினர்களைச் சந்தித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிட்டத்தட்ட 100 நபர்களுக்கும் மேல் உயிரிழந்ததாக கேள்விப்படுகிறோம். இதுவரை 28 சடலங்களை மீட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக, கயத்தாறு பாரதி நகர் பகுதியைச் சார்ந்தவர்கள் மட்டும் 17 பேர் சடலமாக இருப்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் துயர சம்பவத்தை, யாரும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. கரோனா என்ற கொடிய நோய் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும், இந்த வேளையில் துக்க சம்பவத்திற்குக்கூட உறவினர்கள் செல்ல முடியாத நிலை இருக்கிறது.
கேரள அரசு ஏற்கெனவே ஒரு நபருக்கு ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடாக அறிவித்துள்ளது. குடும்பச் சூழ்நிலையைக் கருதி, குறைந்தபட்சம் 25 லட்சம் ரூபாய் நிதி உதவியை கேரள அரசு வழங்க வேண்டும்'' என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் கேரள அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரிக்கு கரோனா