சென்னை: நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த காவல்துறைக்கு நேரம் இல்லை என்று சாடிய நீதிபதி, ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, விருதுநகரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் பிரமுகர் விஜய நல்லதம்பி, சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் ஆகியோரிடம் 30 லட்சம் ரூபாய் பெற்றதாக புகார் எழுந்தது.
மேலும், ராஜேந்திர பாலாஜி உறுதியளித்தபடி வேலை வாங்கிக் கொடுக்காததால், ரவீந்திரன், காவல்நிலையத்தில் மோசடி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி உள்ளிட்டோருக்கு எதிராக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 'ஜோடிக்கப்படும் வழக்குகள்'; கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் 18 பேர் மீதான குண்டாஸ் ரத்து!
கடந்த 2021ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி புகார்தாரரான ரவீந்திரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் என்பதால் அவரது அரசியல் செல்வாக்கு காரணமாக வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் இன்று மீண்டும் (ஜன 06) விசாரணைக்கு வந்தது.
அப்போது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர அரசின் அனுமதி பெறும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டும் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. மேலும், தமிழக காவல்துறைக்கு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நேரமில்லாததால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ விசாரணைக்கு வழங்க விருதுநகர் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டார்.