தூத்துக்குடி: ஜெயிலர் பட வெற்றியை கொண்டாடும் விதமாக தூத்துக்குடி ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு 2 லட்ச ரூபாய் மதிப்பிலான கணினி மற்றும் 200க்கும் மேற்பட்ட குடும்பத்திற்கு காய்கறி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, வெளிநாடுகளிலும் வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன் லால், சுனில், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்து உள்ளனர். அனிருத் இசையமைத்து இருந்தார். பாடல்கள் அனைத்தும் மாஸ் ஹிட் அடித்தன.
ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்ற இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் சுமார் 375 கோடியே 40 லட்ச ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக பட தயாரிப்பு குழுவான சன் பிக்சர்ஸ் தரப்பில் தகவல் வெளியானது. இதுவரை ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் 650 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள வேலாயுபுரத்தில் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் ஜெயிலர் படத்தின் 60 வது நாள் வெற்றி விழாவை முன்னிட்டு மாவட்ட பொறுப்பாளர் விஜய் ஆனந்த் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் இலவசமாக கணினி பயிற்சி பெறும் வகையில் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான கணினியை மாணவ மாணவிகளுக்கு வழங்கினர்.
மேலும் 200க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி தொகுப்பு அடங்கிய பைகளையும் வழங்கினர். முன்னதாக கராத்தே பயின்ற மாணவ -மாணவிகள் கை மற்றும் தலையினால் ஓடுகளை உடைத்து அனைவரின் கவனத்தை ஈர்த்தனர். இந்நிகழ்வில், தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் மன்ற இணை செயலாளர் சக்தி முருகன், துணைச் செயலாளர் சுவாமிநாதன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி! திடீர் நெஞ்சுவலி எனத் தகவல்!