மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் வருமானவரித் துறையினரின் சோதனை தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. குறிப்பாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைக் குறிவைத்து இந்தச் சோதனை நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்த நிலையில், தூத்துக்குடி குறிஞ்சி நகரில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமானவரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
பத்துபேர் கொண்ட குழுவினர் சுமார் இரண்டு மணி நேரமாக சோதனை நடத்தினர். மக்களவைத் தேர்தலுக்கான இறுதிகட்ட பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் முடிந்து விட்ட நிலையில் கனிமொழி வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின்போது அங்கு திரண்ட திமுக தொண்டர்கள் கனிமொழிக்கு ஆதரவாகவும், தேர்தல் ஆணையம் மற்றும் அலுவலர்களுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
சோதனை நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பணம் பட்டுவாடா நடைபெற்றதாகக் கூறி வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி குறிஞ்சி நகரில் தங்கியிருக்கும் கனிமொழி வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோதனை குறித்து பேசிய ஸ்டாலின், இது ஜனநாயகப் படுகொலை. யார் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்றது எனத் தெரியவில்லை என்று தெரிவித்தார்.
தான் பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டை வைப்பதாக கூறிய ஸ்டாலின், தமிழிசை வீட்டில் கோடி கோடியாய் பணம் வைத்துள்ளார்கள். அங்கு ஏன் சோதனை நடத்தவில்லை? என கேள்வியெழுப்பினார்.