தூத்துக்குடி: தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த திட்டம் மூலம் சுமார் 1,978 பள்ளிகளில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 98 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் 79 பள்ளிகளில் 5,580 மாணவ, மாணவிகள் காலை உணவுத் திட்டம் மூலம் பயனடைந்து வருகின்றனர். விளாத்திகுளம், கோவில்பட்டி என மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 18 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தில் 2,630 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், இத்திட்டம் செயல்பாடுகள் குறித்து தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி ஜின் பேக்டரி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, தெற்கு புது தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி என பல்வேறு மாநகராட்சி பள்ளிகளில் ஆய்வு செய்தார்.
அங்கு, மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த கிச்சடி, சாம்பார் ஆகியவற்றை சுவைத்து பார்த்து சோதனை செய்தார். ஆய்வின் போது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார், மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், "காலை உணவு திட்டம் முதல்வரால் தொடங்கப்பட்டது. தூத்துக்குடியில் 79 பள்ளிகளில் 5,580 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்திற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர்.
இதனால், பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கல்வி கற்கவும் உதவியாக இருக்கும் இந்த திட்டம் மூலம் தமிழகத்தில் 1,978 பள்ளிகளில் 1 லட்சத்து 66ஆயிரத்து 98 பள்ளிகளில் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்" என்றார்.
தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சமூக நலத்துறை அலுவலக கட்டிடங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்குவது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு?, அது ரொம்ப முக்கியமா என்று கோபமாக பதில் அளித்தார். பின்னர், தொடர்ந்து சாந்தமாக கூறுகையில், கட்டிடம் கட்டி கொண்டு இருக்கிறார்கள். இதை ஒரே நாளில் செய்ய முடியாது. தூத்துக்குடிக்கு சிறப்பு நிதி கேட்டு இருப்பதாகவும், எந்தெந்த மாவட்டத்தில் கட்டிடம் இல்லையோ அங்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டிடம் கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், அமைச்சர் பல பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட போது மாநகராட்சி மேயர் ஜெகன் இந்த ஆய்வில் கலந்து கொள்ளவில்லை, அமைச்சர் ஆய்வு குறித்து மேயருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் ஏன் இந்த ஆய்வை புறக்கணித்தார்? அல்லது மேயருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லையா? என்பது கேள்விக் குறியாக உள்ளது.
இதையும் படிங்க: 'ஒரு சின்ன தாமரை' கிரிவலப் பாதையில் லவ் சாங்.. திருவண்ணாமலை பக்தர்கள் ஷாக்!