தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவுக்கு ஒன்பது பேருடன் சென்ற கப்பல் மீண்டும் தூத்துக்குடி வந்தகொண்டிருந்தபோது அதில் மேலும் ஒரு புதிய நபர் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து கடலோர கப்பல்படை அலுவலர்கள் அவரை கைது செய்தனர்.
பின்னர், அவரிடம் உளவுத் துறையினர் விசாரிக்கையில் அந்நபர் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் என்றும் மாலத்தீவில் அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. 2015ஆம் ஆண்டு அப்போதைய மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீனை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அகமது அதீப் தூத்துக்குடி வந்த கப்பலில் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அகமது ஆதீப்பிடம் விசாரணை நடத்துவதற்காக டெல்லி, சென்னையிலிருந்து சேவியர் தன்ராஜ் தலைமையிலான குடியுரிமை அலுவலர்களும், உளவுத் துறை அலுவலகளும் விசாரணை நடத்துவதற்காக தூத்துக்குடிக்கு வருகின்றனர்.
அவர்கள் இன்று பிற்பகலில் அகமது ஆதிப்பிடம் விசாரணை மேற்கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. குடியுரிமை அலுவலர்களின் விசாரணைக்கு பிறகே முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.