தூத்துக்குடி: இந்திய பெருந்துறை முகங்களிலே முதன்முதலாக மின்சாரத்தால் இயங்க கூடிய கார்கள் வ.உ.சிதம்பரனார் துறைமுக பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தா.கி.ராமச்சந்திரன் மின்சாரத்தால் இயங்க கூடிய கார்களை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
மின்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கக் கூடிய எனர்ஜி எபிசியன்சி சர்வீஸ் லிமிடெட் நிறுவனம் மின்சாரத்தால் இயங்க கூடிய 3 கார்களை வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு வழங்கியுள்ளது. வருங்காலத்தில் 3 இ-கார்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தா.கி.ராமச்சந்திரன் பேசுகையில், "பல்வேறு பசுமை திட்டங்களை வ.உ.சிதம்பரனார் துறைமுகம் செயல்படுத்தி வருகிறது. அண்மையில் 5 மெகாவாட் சூரிய மின்சக்தி ஆலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்தார்.
இந்திய பெருந்துறை முகங்களில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் முதலாவதாக இ-கார்கள் திட்டத்தை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியதாகும்.
துறைமுகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பதற்காக கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும் வகையில் 500 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின்சக்தி ஆலை நிறுவப்பட்டுள்ளது.
கூடுதலாக 270 கிலோவாட் மேற்கூரை சூரியமின் சக்தி ஆலை துறைமுக பல்வேறு இடங்களில் நிறுவப்பட உள்ளது" என்றார்.
இந்நிகழ்ச்சியில் வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவர் பிமல்குமார் ஜா, தலைமை இயந்திர பொறியாளர் சுரேஷ் பாபு, எனர்ஜி எபிசியன்சி சர்வீஸ் லிமிடெட் நிர்வாக துணைத் தலைவர் சவுரப் குமார், துறைமுக மூத்த அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்- சாதி வெறியர்களின் கொண்டாட்டம் அநாகரீகம்- தொல். திருமாவளவன்!