தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய முதல்வராக டி.நேரு பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், மருத்துவமனை வளர்ச்சிக்கான ஆய்வுகளை மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அனைவருக்கும் சிறந்த முறையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும் என்றார். தொண்டு நிறுவனங்கள் கரோனா நோயாளிகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன், மருத்துவ உபகரணங்களை வழங்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, இதுபோன்ற உதவிகளை செய்ய மக்கள் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கை பற்றாக்குறை, செவிலியர்கள் பற்றாக்குறை இல்லாத நிலையை உருவாக்கப் பணியாற்றுவேன் என்றும் தொடர்ந்து தெரிவித்தார்.
”கரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்படுபவர்களுக்கு இரண்டாவது நாளே நுரையீரல் பாதிக்கப்படுவதால் சிகிச்சைப் பலனின்றி நோயாளிகள் உயிரிழக்க நேரிடுகிறது. தற்போது, சராசரியாக நாளொன்றுக்கு மாவட்டத்தில் இரண்டு பேர் கரோனாவால் உயிரிழக்கின்றனர். இறப்புகளே இல்லாத நிலையை உருவாக்குவது 100 விழுக்காடு சாத்தியமற்றது. எனினும் கரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: உறங்க முடியவில்லை' பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் குறித்து அஸ்வின் ட்வீட்!