தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் குணசேகரன். இவருடைய மனைவி தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் பணிபுரியும் மகனைப் பார்ப்பதற்காக குணசேகரன் தனது குடும்பத்தினருடன் கடந்த 8ஆம் தேதி அமெரிக்காவுக்குச் சென்றார். தூத்துக்குடியில் உள்ள வீட்டை கவனித்துக் கொள்வதற்காக 2 வேலை ஆட்களை அவர் நியமித்திருந்தார். இந்நிலையில் மாலையில் மின்விளக்குகளை எரியச் செய்வதற்காக வேலையாட்கள் சென்றபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டனர்.
மேலும், வீட்டில் நிறுத்தியிருந்த ரூ. 8 லட்சம் மதிப்புள்ள கார், வரவேற்பறையில் வைத்திருந்த டிவி ஆகியவை திருடு போயிருந்ததோடு படுக்கை அறையில் இருந்த பொருட்களும் சிதறிக் கிடந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாளமுத்து நகர் போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், கார், டிவி உள்ளிட்டவை திருடு போயுள்ளன. இருப்பினும் குடும்பத்தினர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தபிறகே என்னென்ன திருடு போயுள்ளன என்பது குறித்த முழு விவரமும் தெரியவரும் என்றனர்.
இதைத்தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்தத் துணிகர திருட்டு சம்பவம் குறித்து தாளமுத்து நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: திருச்சியில் ரூ. 93 லட்சம் மதிப்புள்ள 2.17 கிலோ தங்கம் பறிமுதல்!