தூத்துக்குடி அருகே உள்ள சிவத்தையாபுரம் பகுதியில் இந்து மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் கிறித்தவ அமைப்பைச் சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் மதபிரச்சாரம் செய்வதற்காக அங்குள்ள மக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்துள்ளனர்.
இதனை கண்ட கிராம மக்கள் துண்டு பிரசுரம் விநியோகம் செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களை தடுத்து ஊரைவிட்டு துரத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
அதேபோல் தூத்துக்குடி கூட்டாம்புளி மேலத்தெருவைச் சேர்ந்தவர் பட்டுராஜ் மகன் ஆசீர்வாதம் ஞானதுரை (33). இவர் மங்களகிரியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (அக் 5) செபத்தையாபுரம் பகுதியில் பைபிள் வாசகங்கள் அடங்கிய புத்தகங்களை வீடு வீடாகக் கொடுத்து மதபிரசாரத்தில் ஆசீர்வாதம் ஈடுபட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அவரை தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த ஆசிரியர் ஆசீர்வாதம் ஞானதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து சாயர்புரம் காவல் நிலையத்தில் ஆசீர்வாதம் புகார் அளித்துள்ளார்.
இதன்பேரில், சிவத்தையாபுரத்தைச் சேர்ந்த சுகிர்தராஜ் மகன் ஹரிஹரசுதன் (32), சிவமுருகன் மகன் ஜெய்சீலன் (52), கோபால் மகன் மாதவன் (54) ஆகிய மூன்று பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 341, 294பி, 295, 323, 506 (II) ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் மாதவன் என்பவர் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோயில் அருகே பள்ளிவாசல் திறப்பு; எதிர்ப்பு தெரிவித்து திரண்ட பாஜக, இந்து முன்னணியினரால் பதற்றம்